மழை காலத்தில் நோய்களால் ஏற்படும் தொற்றுகள் அதிகமாக மக்களிடையே பரவும். ஆகையால் வெளி உணவுகளை சுவைப்பதை அறவே நீக்க வேண்டும். தட்ப வெப்ப மாறுதல்களும் நோய் தொற்றிற்கு காரணமாக இருக்கலாம்.
இத்தகைய நோய் தொற்றுகளில் இருந்து உடலை காப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் இந்த கிருமிகளை எதிர்த்து போராடி உடலை ஆரோக்கியத்தோடு வைக்க உதவும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை பற்றி பார்க்கலாம்
சோளம்:
இதில் ஊட்டச்சத்துகள் மிகவும் அதிகமாக உள்ளது. பல விதமான நோய்களை எதிர்த்து போராடும் வேதி பொருட்கள் சோளத்தில் நிறைந்துள்ளன. விட்டமின் ஏ , விட்டமின் பி மற்றும் விட்டமின் ஈ சோளத்தில் அதிகமாக உள்ளது.
இதில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றன. மழை காலங்களில் பரவலாக ஏற்படும் வயிற்றுப்போக்கு வருவதை குறைக்கிறது இந்த சோளம்.
ஆப்பிள் மற்றும் பேரிக்காய்:
க்யூரஸ்ட்டின் என்ற பாலிபீனால் கூறு ஆப்பிள் மற்றும் பேரிக்காயில் அதிகம் உள்ளது. இது வீக்கத்தை குறைப்பதற்கும் நரம்புகளில் ஆக்ஸிஜெனேற்றத்தை தடுக்கவும் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
தினம் 1 ஆப்பிள் சாப்பிடுவோருக்கு டைப் 2 நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது. விட்டமின் சி மற்றும் கே அதிகமாக இருப்பதால் தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து உடலை காக்கின்றன.
ஓட்ஸ்:
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பொதுவாக இது ஒரு சிறந்த காலை உணவாக ஏற்றுக்கொள்ள பட்டிருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இது வெளியேற்றுகிறது. ஓட்ஸ் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக செயலாற்ற உதவுகிறது.
கொண்டைக்கடலை:
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. விட்டமின் சி அதிகமாக இருக்கும் உணவுகளை விட, சளி மற்றும் இருமலுக்கு இது ஒரு சிறந்த மருந்து.
பாதாம் :
இதில் விட்டமின் ஈ, கால்சியம், இரும்பு, மாங்கனீஸ் போன்றவை அதிக அளவில் உள்ளன. பாதாமில் கனிமங்கள் அதிக அளவில் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பாதாமில் இருக்கும் விட்டமின் ஈ , ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.
மழை நாட்களின் ஆனந்தத்தை அனுபவிக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம்