நாட்டில் மழை பெய்வதற்கான சாத்தியம் குறைவாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதால், அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறியளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, கிழக்கு கடற்பரப்பின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30–40Km வரை காணப்படும்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55Km வரை அதிகரித்து வீசக் கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50Km வரை அதிகரித்து வீசக்கூடும். அத்துடன் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.