இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரான, சொங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று(23) கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தச் சந்திப்பில் சீனத் தூதுவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கலந்து கொண்டனர்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80% உரிமையை சீனாவுக்கு வழங்குவதற்கும், முதலீட்டு வலயத்தை அமைப்பதற்கு 15,000 ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஷ கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.
நேற்றைய சந்திப்பின் போது இந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரையும் சீன உயர் மட்டக் குழுவினர் சந்தித்தனர்.