முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சீஷல்ஸ், உகண்டா ஆகிய நாடுகளில் திறக்கப்பட்ட இலங்கைக்கான தூதரகங்களை மூடுவதற்கு புதிய அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சார்பாக ஆதரவை திரட்டுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பலம்வாய்ந்த நாடுகளை எதிர்க்கும் கொள்கையுடைய நாடுகளில் தூதரகங்களைத் திறந்து அதனூடாக இராஜதந்திர நகர்வுகளை மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டார்.
அத்துடன் தனது தனிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் குறித்த தூதரகங்களை முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
குறிப்பாக மில்லியன் கறுப்புப் பணத்தையும், சொத்துக்களையும் மஹிந்த ராஜபக்ஷ சீஷல்ஸில் பதுக்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட போதிலும், அவற்றை அந்நாட்டு அரசாங்கம் மறுத்திருந்தது.
இதேவேளை, ஸ்ரீலங்கா மீதான குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்பதற்கும், அரசாங்கம் மீது நற்பெயரை ஏற்படுத்துவதற்கான பரப்புரைகளை மேற்கொள்வதற்கும் மேற்குலக நாடுகளில் அதற்கான முகவர்களை நியமித்து, அவர்களுக்கு பெருந்திரளான பணத்தை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விரயம் செய்திருந்ததாகவும் புதிய அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் கண்டுபிடித்தது.
இது தொடர்பிலான விசாரணைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சில நாடுகளிலுள்ள வதிவிடமல்லாத இராஜ தந்திரிகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்திவருவதாக கூறியிருந்தார்.
உகண்டா தலைநகர் கம்பாலாவில் இலங்கைக்கான தூதரகம் 2013ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி திறக்கப்பட்டது.
சீஷல்ஸில் இலங்கைத் தூதரகம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடிவிடுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அரச உயர்மட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.