மக்களால் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி தோல்வியடையச் செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை இரண்டு ஹெலிக் கொப்டர்களில் பாதுகாப்பாக வீடு செல்ல வழியனுப்பிய சம்பவம் உலகிலேயே இலங்கையில் மாத்திரமே நிகழ்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நான் ஜனாதிபதியாகியதனால் இது இவ்வாறு நடந்தது. மாறாக, மஹிந்த ஜனாதிபதியாகி நான் தோல்வியடைந்திருந்தால் எனக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கத் தேவையில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மொனராகல மாவட்ட பிபில தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
குண்டு துளைக்காத கார்களும், தனது பாதுகாப்புக்கு தான் விரும்பிய இராணுவ அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டுதான் மஹிந்த தோல்வியடைந்த பின்னர் சென்றார். ஜனாதிபதியாகிய நான் நினைத்திருந்தால், இதனை வேறு விதத்தில் அமைத்திருக்கலாம்.
இவ்வாறெல்லாம், செய்ததன் பின்னர்தான், சில எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவின் பாதுகாப்பை குறைத்ததாக கூக்குரல் இடுகின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்