ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையுடனான வேட்பு மனு அனுமதியை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
இச்செய்தியை இலங்கையின் அரசாங்க பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும். (முன்னர் அவர் குருநாகலில் போட்டியிட விருப்பம் வெளியிட்டிருந்தார்)
அதேநேரம் அவரை பிரசாரக் குழுத் தலைவராகவோ அல்லது மாவட்டத் தலைவராகவோ நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியமைக்குமானால், அதன் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முடியாது என்றும் இன்னாள் ஜானாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அதிக விருப்புவாக்குகளை பெறுபவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மஹிந்த ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவே பதவிவகிக்க முடியும்.
இதேவேளை குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் சஜின்வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா, மேர்வின் சில்வா, பிரேம்லால் ஜெயசேகர ஆகியோருக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்படாது.
முன்னதாக ரோஹித்த அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, லச்மன் வசந்த பெரேரா மற்றும் மஹிந்தாநந்த அலுத்கமகே ஆகியோருக்கும் வேட்பு மனு வழங்குவதில்லை என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இந்நால்வருக்கும் வேட்புமனு அனுமதியை ஜனாதிபதியிடம் இருந்து ஒருவாறாக பெற்றுள்ளனர்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான மேல்மாகாணசபை உறுப்பினர் சமன்மாலி சகலசூரியவுக்கு வேட்புமனு வாய்ப்பு வழங்கப்படாது.
இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டால், தாமும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளின் மூலம் நாடாளுமன்றத்துக்கு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அறிவித்துள்ளார்.
இதனை நேற்றிரவு அவரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு வர, ஜி.எல்.பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, டளஸ் அழகப்பெரும, திலான் பெரேரா உள்ளிட்டோர் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் தகுதிவாய்ந்த புத்திஜீவிகள் மற்றும் கல்வி சமூகத்தவர் மாத்திரமே தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபாலவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(riz)