மஹிந்தானந்தவின் வங்கிக் கணக்கு விபரங்களை புலனாய்வுப் பிரிவிற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் வங்கிக் கணக்கு விபரங்களை புலனாய்வுப் பிரிவிற்கு வழங்குமாறு உள்நாட்டு வெளிநாட்டு வங்கி முகாமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹிந்தானந்த குறுகிய காலத்தில் சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளின் போது கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த சட்டவிரோதமான முறையில் சொத்துக்களையும் பணத்தையும் குவித்து பணத்தை வெளிநாட்டு உள்நாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

2011ம் ஆண்டு 40ம் இலக்க நிதிச் சலவைச் சட்டம், 2006ம் ஆண்டு நிதிச் சலவைச் சட்டம் ஆகியனவற்றின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விளக்கமளித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 16 பேரிடம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாகவும் அவற்றை வெளிநாட்டு உள்நாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும், உரிய காரணிகளை கவனத்திற் கொண்ட நீதவான், மஹிந்தானந்தவின் உள்நாட்டு வெளிநாட்டு வங்கிக் கணக்கு விபரங்கள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.