ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டித்துள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்றால் அவர் கட்சிக்கு திரும்பி தம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மற்றொரு கட்சியுடன் இணைந்து பணியாற்ற முயன்றால் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழக்க வேண்டியிருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி தான் சுதந்திரக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என்கிறார், கட்சியின் ஆலோசகர் என்கிறார். இது குறித்து அவரிடம் கேள்வியெழுப்ப தீர்மானித்துள்ளோம்” என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டிருந்தார்.
இதனைக் கண்டித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஊடக அறிக்கைகளை வெளியிடும் போது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும், சதி முயற்சியில் ஈடுபடுபவர்களை பலப்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடக் கூடாது“ என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.