மஹேலவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆலோசர் பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கிய மஹேல ஜெயர்த்தனவை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடாத்தி வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மோசமான நிலையை அடைந்த இங்கிலாந்து கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக அந்த அணியின் இயக்குனராக முன்னாள் தொடக்க வீரர் ஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டார். ஸ்ட்ராஸ் அப்போதைய பயிற்சியாளரை நீக்கி விட்டு ஆஸ்திரேலியாவின் டிரெவோர் பெய்லிஸ்சை பயிற்சியாளராக நியமித்தார்.

தற்போது அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் சிறந்து விளங்கிய இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்த ஜெயர்வத்தனவை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணி 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்லும் போது தற்போதைய இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக இருக்கும் பால் பார்பிரேஸ்தான் பயிற்சியாளராக இருந்தார். மேலும், தற்போது தலைமை பயிற்சியாளர் பெய்லிசும் ஜெயவர்த்தனவை நன்கு அறிந்தவர். இதனால், பால் பார்பிரேஸ் ஜெயவர்த்தனவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், இயக்குனர் ஸ்ட்ராஸ் ஜெயவர்த்தனவை ஒப்பந்தம் செய்வது குறித்து எந்தவித உத்தரவாதத்தையும் இதுவரை கூறவில்லை.

அடுத்த 18 மாதங்களில் இங்கிலாந்து அணி ஆசிய கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. அப்போது பாகிஸ்தான் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. அதேபோல் தங்கள் நாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியை சந்திக்க இருக்கிறது.

எனவே, ஆசிய நாடுகளின் மைதானங்களைப் பற்றி நன்று அறிந்த ஜெயவர்த்தனவின் ஆலோசனை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. இங்கிலாந்து நிர்வாகம் ஏற்கனவே, ஒருநாள் போட்டிக்காக பால் காலிங்வுட்டை ஆலோசகராக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறது. தற்போது அவர் துர்காம் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணி 2010-ம் ஆண்டு இவர் தலைமையில்தான் டி20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது.

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்லே ஜைல்ஸ் மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்டாக் அகமது ஆகியோரையும் ஆலோசகராக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

(riz)