மாகாண அமைச்சுப் பதவிக்கு ஆறு பேர் களத்தில் போட்டி

வெற்றிடமாயுள்ள மேல் மாகாண சபையின் அமைச்சுப் பதவிக்காக மாகாண சபை உறுப்பினர்கள் ஆறு பேருக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மேல் மாகாண சுகாதார அமைச்சராக இருந்த நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவின் அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டின் கீழான வாக்கெடுப்பு தோல்வியுற்றதன் காரணமாக அவர் தனது அமைச்சுப் பதவியை இழந்திருந்தார்.

குறித்த அமைச்சுப் பதவியை தற்போது முதலமைச்சர் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து மேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆறுபேர் குறித்த மாகாண அமைச்சுப் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

மேலும் சிலர் குறித்த அமைச்சுப் பதவி கம்பஹா மாவட்டத்துக்கு வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே குறித்த அமைச்சுப் பதவியை மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நௌசர் பௌசிக்கு வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய இளைஞர் நற்பணி இயக்கத்தின் தலைவர் அபுல்கலாம் ஆசாத் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

1989ம் ஆண்டு தொடக்கம்1993ம் ஆண்டு வரையான முதலாவது மாகாண சபையில் களுத்துறையைச் சேர்ந்த ஏ.எம்.யூசுப் மாகாண அமைச்சராக பதவி வகித்திருந்தார். அதன் பின் பௌசி சிறிது காலம் மாகாண அமைச்சர் பதவியில் இருந்திருந்தார்.

பௌசிக்குப் பின்னர் மேல்மாகாண அமைச்சுப் பதவியொன்று இதுவரை எந்தவொரு முஸ்லிமுக்கும் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே நௌசர் பௌசி கடந்த 1999ம் ஆண்டு தொடக்கம் மாகாண சபையில் உறுப்பினராக இருப்பதால் அவருக்கு குறித்த அமைச்சுப் பதவியை வழங்குவதே பொருத்தமானது என்றும் ஆசாத் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.