1962 ம் ஆண்டு ஹாஜி பாத்திமா என்பவரால் வக்பு செய்யப்பட்ட கானியில் இலங்கை வாழ் அநாதை மாணவர்களின் அறனாகவும், புகழிடமாகவும், அரவனைக்கும் தலமாகவும் உருவாக்கப்பட்ட அநாதை இல்லமே மாகொலையில் அமைந்துள்ளது.
இதன் ஸ்தாபகத்தலைவர் ஜாபிர் ஹாஜியார் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் தலைமையில் அக்காலத்தில் இருந்த நல்லுல்லம் படைத்த நிருவாகிகள் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்திற்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு தனவந்தர்களினூடாக விலைமதிப்புமிக்க பல ஆதனங்களையும், சொத்துக்களையும் இதற்காக திரட்டி உள்ளனர்.
அதன் ஒரு மிகப்பெரும் சொத்துத் தான் மல்வானையில் அமைந்துள்ள மாகொல முஸ்லிம் அநாதைநிலையத்தின் கிளையான 25 ஏக்கரில் அமைந்துள்ள யதாமா பாடசாலையும் அதனுடன் இணைந்த விடுதி வளாகமுமாகும்.
1998 -2007 காலப்பகுதிகளில் இம்மல்வானைக்கிளை 400க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கல்வி,விளையாட்டு துறையில் தடம் பதித்து தேசிய அளவில் அதன் புகழ் பேசப்படுமளவுக்கு கல்வித்துறையில் முன்னேனற்றத்தைக்கண்டிருந்தது. ஆனால் கவலைக்குரிய விடயம் தற்போது மல்வானைக்கிளையில் எந்தவொரு அநாதை மாணவர்களுமில்லாத நிலை உருவாகியுள்ளது.
இவ்வீழ்ச்சி நிலைக்கு காரணமாக தற்போதுள்ள மாகொல அநாதை நிலையத்தின் தலைவர் இரண்டு பிரதான காரணங்களை கூறுகின்றார்.
- கோவிட் நிலமை காரணமாக மாணவர்கள் இணையவில்லை.
- இலங்கையில் மேலும் பல அநாதை நிலையங்களின் தோற்றம்.
இவ்விரு காரணிகளும் ஏற்புடைய காரணிகள் அல்ல, காய்தல், உவர்த்தல் இன்றி நடுநிலையாக சிந்தித்தால் மர்ஹூம் ஜாபிர் ஹாஜியாரின் மறைவின் பின்னர் தலைமைப் பொறுப்பையேற்ற தலைவரின் காலப்பகுதியில் மாணவர்களின் கல்வித்துறையில் ஏற்பட்ட அபார வீழ்ச்சியே காரணமாகும் என்பது கசப்பான உண்மையாகும். இவரின் காலப் பகுதியில் மாணவர்களின் கல்வியில் ஏற்பட்ட தொய்வு நிலையால் படிப்படியாக மாணவர்கள் இணையும் வீதம் குறைந்து தற்போது எந்தவொரு மாணவரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
மர்ஹும் ஜாபிர் ஹாஜியாரின் மறைவின் பின்னர் பொறுப்பேற்ற தலைவரின் அசமந்தப் போக்கும், நிர்வாகத்திறமின்மையும், சீரிய கல்விப்பின்புலமுமற்ற நிலையே தற்போதைய வீழ்ச்சிக்கான காரணமாகும். இலங்கை வரலாற்றில் அநாதை சிறார்களை அரவணைப்பதில் சிம்மசொப்பனமாக திகழ்ந்த பழமைவாய்ந்த நிறுவனமே மாகொல முஸ்லிம் அநாதை நிலையமாகும்.
அப்படியான ஒரு நிறுவனத்திற்கு ஏன் இந்நிலை என்று அலசினால் தற்போதைய தலைவரின் காலப்பகுதியில் கல்வித் துறையில் ஏற்பட்ட அபரிமிதமான வீழ்ச்சியாகும்.
இவ்வீழ்ச்சியை நிரூபிக்க பல சான்றுகளை முன்வைக்கலாம். அவற்றுள் முதன்மையானது தற்போதைய தலைவரின் காலப்பகுதியில் மாணவர்கள் க.பொ.த சாதாரண தரத்திலும், உயர் தரத்திலும் பெற்ற சித்திகள் முன்னால் தலைவர் ஜாபிர் ஹாஜியாரின் காலத்தின் அடைவுமட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவீழ்ச்சி நிலையில் உள்ளது. மாணவர்களின் பல்கலைக்கழக பிரவேசம், ஏனைய துறைசார் அடைவு மட்டங்கள் ஓப்பிட்டளவில் வீழ்ச்சிநிலையை அடைந்திருப்பதை காணலாம். இதனால் பாதுகாவலர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ? என்ற அச்சத்தில் பிள்ளைகளை சேர்ப்பதில் பின்வாங்குகின்றனர்.
இவ்வீழ்ச்சி நிலையில் இருந்து அநாதை நிலையத்தை மீட்டெடுக்க பழைய மாணவர் சங்கம் பல திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியபோது அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதைய தலைவர் தான்றோற்றித்தனமாக செயற்பட்டார்.
இப்போது சுமார் 25 ஏக்கரில் அமைந்துள்ள மல்வானை யதாமா வளாகத்தை தற்போதைய தலைவரின் உறவினரான மல்வனையை சேர்ந்த ஒரு வர்த்தகருக்கு “யதாமா சாஹிரா பாடசாலை “என்ற பெயரில் சர்வதேசப்பாடசாலை நடாத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
அநாதை சிறார்களுக்காக வக்ஃப் செய்யப்பட்ட பெரும் சொத்து வியாபார நோக்கில் நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரின் சுயநலத்துக்காக மூன்றாம் நபருக்கு தாரைவார்க்கப்படுவதை சமூக உணர்வுள்ள யாரும் ஏற்கமாட்டார்கள்.
வக்ஃப் சொத்தை பரிபாலனம் செய்வதில் கடைபிடிக்க வேண்டிய வரையறைகளையும் மீறி மிக சூட்சுமமான முறையில் வெளிப்படைத்தன்மையற்றதாய் இந்த ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது.
அடுத்த தொடரில் இத்தகைய அநாதைகளுக்கு உரித்தான பொதுச் சொத்தை வியாபார நோக்கில் கையால்வது சம்பந்தமான ஷரிஆவின் நிலைப்பாடு பற்றிய தெளிவைப்பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.
(பழைய மாணவர் சங்கம்)
