“மாற்றம் என்பது மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரமல்ல, நல்லாட்சியும் உருவாக வேண்டும்”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

“நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி என்கின்ற தீமையை ஓழிப்பதற்காக மட்டுமல்ல. நிரந்தரமான நல்லாட்சியை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே அந்த மாற்றத்தை உருவாக்கினார்கள். அந்த நல்லாட்சிக்கான அத்திவாரத்தை இடுவதில் பல தடைகள் உருவாக தொடங்கியுள்ளன.” என NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக பல விடயங்களை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தது. சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் என்கிற வாக்குறுதி பிரதானமானதாகும். இதனை அமைப்பதற்கு அடிப்படையாக முதற்கட்டமாக 19 ஆம் திருத்தச் சட்டம் தேவைப்பட்டது. பல இழுபறிகளுக்குப் பின்னர் அது நிறைவேற்றப்பட்டது. அதன் இரண்டாம் கட்டம் அரசியல் சாசன சபையாகும். இதனை அமைத்தால்தான் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள முடியும்.

இந்த நாட்டில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்த வேண்டுமென்றால் அரசியல் தலையீடில்லாத நிர்வாக கட்டமைப்பு இருப்பது அவசியமானதாகும். நீதித்துறை, பொலிஸ்துறை, தேர்தல் திணைக்களம், பொது நிர்வாகம் என்பவற்றில் அரசியல் தலையீட்டை இல்லாதொழித்தாலேயே நல்லாட்சியை கொண்டுவர முடியும். சுயாதீன ஆணைக்குழுக்களை கொண்டுவந்து தான் இதனை செய்ய முடியும்.

அண்மையில் பாராளுமன்றத்தில் அரசியல் சாசன சபைக்காக சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவர்களின் பெயரை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான அர­சியல் சூழ்நிலையும் இழுபறியும் காரணமாக அது நிறைவேறவில்லை.

நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி என்கின்ற தீமையை ஓழிப்பதற்காக மட்டுமல்ல. நிரந்தரமான நல்லாட்சியை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே அந்த மாற்றத்தை உருவாக்கினார்கள். அந்த நல்லாட்சிக்கான அத்திவாரத்தை இடுவதில் பல தடைகளை உருவாக தொடங்கியுள்ளன

19 ஆம் திருத்தச்சட்டம், அரசியல் சாசன சபை, சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன நல்லாட்சிக்குரிய அத்திவாரமாகும். இப்போது நல்லாட்சிக்கான அத்திவாரத்தை அமைக்கவிடாமல் பராளுமன்றத்தில் இருக்கின்ற பலர் மக்களுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதனை குழப்புவதற்காக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்தனர்.

மஹிந்த ராஜபக்ஷவை விசாரிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டபோது அதற்காக பாராளுமன்றத்தை குழப்பி இரண்டு தினங்கள் போராட்டங்களை நடத்தினார்கள். அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வும் முன்னணியில் இருந்துகொண்டு போராட்டத்தினை நடத்தினார்.

மக்களுக்காக போராட்டம் நடத்தாத ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் மஹிந்தவுக்காக போராட்டம் நடத்தினார் என்கிற வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் விசாரணைகளை விசாரிக்காமல் அவரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே போராடினார். ஏன் பாதுகாக்க வேண்டுமென்றால் அதில் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நன்மை இருக்கிறது. தலைவரை பாதுகாத்தால் தானும் தப்பித்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கிருக்கிறது.

அதேபோன்றுதான் தேர்தல் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம். இதில் தேசிய ரீதியாக நன்மை இருக்கின்றது. விருப்பு வாக்குமுறை இல்லாமல் செய்யப்படல் வேண்டும். தொகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இதுதான் 20 ஆவது திருத்தச்சட்டம்.

ஆனால் இதில் ஒரு கபடத்தனமும் இருக்கின்றது. இந்த திருத்தத்தைக் கொண்டு வருவதில் இருக்கின்ற அவசரத்தைப் பார்த்தால் ஒரு கபடத்தனம் இருப்பது புலப்படும். சிறுபான்மை மக்கள் தேசிய மட்டத்தில் கொண்டிருக்கும் பாராளுமன்ற பலத்தை சிதைத்துவிட வேண்டும் என்கிற நோக்கமே அது. இது தொடர்பில் நாம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெ ளிவாக சொல்கிறோம்.

இது தொடர்பில் நாம் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்னார் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது எமது கட்சியின் செயலாளர் நேரடியாகவே இவ்விடயத்தை வலியுறுத்தினார்.

திருத்தம் அவசியமானது. ஆனால் இதற்கு காட்டப்படும் அவசரம் எங்களுக்கு அச்சத்தை தருகின்றது. தேர்தல் திருத்தமானது முறையான நேரமெடுத்து சிறந்த திட்டத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்”