மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.
மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் பயிற்சிக்கான அனுமதி வழங்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்களின் பயிற்சிக்கு ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முயற்சி செய்வதாகவும், அதற்கு ஏதுவான வகையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் நேற்று செய்திகள் பரவியிருந்தன. எனினும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை மறுத்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கொன்றுக்குப் பதிலளிப்பது தொடர்பாகவே இன்றைய கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் மட்டுமே குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழக பிரதிநிதிகள் யாரும் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என்றும், அவர்களுடன் கலந்துரையாடும் தேவை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.