(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணி இந்த வருடத்தில் விளையாடிய ஆறு இருபதுக்கு-20 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், லசித் மாலிங்கவின் தலைமை பொறுப்பும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அணியின் தொடர் தோல்விகள் காரணமாக, அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தில் மாலிங்க தலைவராக செயற்படுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சொந்த மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும், களத்தடுப்பில் செய்த தவறுகள் காரணமாக இலங்கை அணி தோல்வியை தழுவியது.
குறிப்பாக, பிடியெடுப்புகள் மற்றும் ரன்-அவுட் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தமை, அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று(06) கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.