மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணி வெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம் நாளை மறுதினம் (02) கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன.
கடந்த 25ம் திகதி நடந்த தாக்குதலில், பொலன்னறுவ மற்றும் பொல்பிட்டிகம சேர்ந்த மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஆறு படையினர் காயமடைந்தனர்.
உயிரிழந்த இரண்டு இராணுவ அதிகாரிகளின் சடலங்களையும் ஏற்றிக் கொண்டு வரும், ஐ.நாவின் சிறப்பு விமானம், வரும் சனிக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
இந்தச் சடலங்களை ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பொறுப்பேற்கவுள்ளனர்.
ஐ.நா கொடி போர்த்தப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை படையினர் இருவரது சடலங்களுடன், வரும் மாலியில் உள்ள ஐ.நா அமைதிப்படையினரின் கட்டளைத் தளபதி, லெப்.ஜெனரல் டெனிஸ் ஜில்லிஸ்போர் மற்றும் அவரது பணியகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், விமான நிலையத்தில் வைத்து சடலங்களை முறைப்படி இராணுவத் தளபதியிடம் கையளிக்கவுள்ளனர்.
சடலம் பொறுப்பேற்கப்பட்டதும், இலங்கை தேசியக் கொடி போர்த்தப்பட்டு, ஐ.நா கொடியை மாலிக்கான ஐ.நா அமைதிப்படைத் தளபதியிடம் கையளிக்கும் அணிவகுப்பு இடம்பெறும்.
அதன் பின்னர், சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.