மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் தற்போது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையரான மாலபே லஹிரு மதுஷங்கவை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லஹிருவின் மனைவியான சாந்தனி மதுரங்கனி உள்ளிட்ட உறவினர்களே இந்தக் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறிய நண்பரின் வார்த்தையை நம்பி அவர் மாலைதீவுக்கு சென்றதாகவும், எனினும் குறித்த நபர் லஹிருவின் பணத்தினை கொள்ளையிட்டு தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், 2015ம் ஆண்டு ஒக்டோபர் 22ம் திகதி மாலைதீவு அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, அவரை அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்திய வேளை, நான்கு சாட்சியாளர்களுக்கு அவரை அடையாளம் காண முடியவில்லை. இதன்படி அவர் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், ஜனாதிபதியை கொல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவரை விடுதலை செய்வதில், இராஜதந்திர ரீதியான தலையீடு அவசியம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
இதற்கமைய கடந்த ஐந்து மாத காலமாக தனது கணவர் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி மாலை தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சாந்தனி மதுரங்கனி ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ளார்.