மாலைத்தீவு அதிபருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்…

மாலைத்தீவின் நெருக்கடி நிலை கவலை அளிப்பதாகவும் அதிபர் யாமீன் சட்டத்தை மதித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மாலைத்தீவில் எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தமையினால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உருவானது. இதனால் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த அதிபர் அப்துல்லா, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார்.

முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் மாலைத்தீவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அமெரிக்க தனது கவலையை தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹீதர் நாவேர்ட் கூறியதாவது:-

மாலைத்தீவில் நெருக்கடி நிலையை அதிபர் யாமீன் பிரகடனம் செய்திருப்பது குறித்த தகவல்கள் அமெரிக்காவிற்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. அதிபர் யாமீன், இராணுவம் மற்றும் பொலிஸ் என அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு இணங்க வேண்டும், உச்ச நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

அத்துடன் பாராளுமன்றம் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசியலமைப்பின்படி மக்களின் உரிமைகள் அனைத்தும் வழங்கப்படவேண்டும் என அவர் கூறியுள்ளார்.