மிட்செலின் முகத்தை பதம் பார்த்த பாகிஸ்தான் அணியின் பந்து

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்வர் அலி பந்து வீசியதில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த மிட்செல் மெக்லநகன் முகத்தில் பந்து தாக்கி காயமடைந்தார். இதில், மிட்சேலுக்கு கண்ணில் கடுமையாக தாக்கியதில் மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறினார்.

வெலிங்டனில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை பாகிஸ்தானின் அன்வர் அலி, நியூசிலாந்து வீரர் மெக்லநகனுக்கு வீசினார். அப்போது, வேகமாக வீசப்பட்ட பந்து பவுன்சராகி, மெக்லநகன் ஹெல்மெட்டுக்குள் புகுந்து இடது கண்ணுக்கு மேல் கடுமையாக தாக்கியது, உடனடியாக மைதானத்தை விட்டு அவர் வெளியேறினார். அப்போது, உடனடியாக மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர்.

பின்னர், சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் ஆட்டங்களிலும் மெக்லநகன் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி, செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மெக்லநகன், தன் உடல் நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டத்தின் போது, வேகமாக வீசப்பட்ட பந்து, எகிறி தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் ஃபிலிப் ஹியூஸ் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.