வெனிசூலாவில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதையடுத்து, அந்நாட்டு அரசு அலுவலகங்களுக்கு வாரம் 5 நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை அதிபர் அரிஸ்டோபலோ இஸ்துரிஸ் தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை அறிவித்ததாவது,
மிக அத்தியாவசியமான பணிகளைத் தவிர, பிற பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளுக்கு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழக்கம் போல் விடுமுறை என்பதால், இனி வாரம் இரண்டு நாள்களுக்கு மட்டுமே அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றார் அவர்.
ஆரம்ப மற்றும் உயர் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படும் என்று அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசூலாவில், கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.
வெப்ப சலனம் காரணமாக ஆறுகள் வற்றி, நீர் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இந்த மின்சாரப் பற்றாக்குறை நிலவுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
எனினும், அரசின் தவறான கொள்கைகளே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.