நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறாது என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நேற்று(18) பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்குறித்த செய்தியினை குறிப்பிட்டிருந்தார்.
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் கடந்த 17ம் திகதி செயலிழந்துள்ளது. குறித்த அந்த இயந்திரத்தின் பொய்லருடன் தொடர்பான நீர் ஆவியாகுதல் குழாய் தொகுதியில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாகவே குறித்த இயந்திரம் செயலிழந்துள்ளது.
இதனை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு சுமார் மூன்று நாட்கள் தேவைப்படலாம்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மூன்று இயந்திரங்கள் காணப்படுகின்றன.
முதலாம் இலக்கம் இயந்திரம் ஆரம்பம் முதல் 37 முறை பழுதடைந்துள்ளது. அங்குள்ள ஏனைய இயந்திரங்கள் தொடர்பாக விபரிக்கையில் இரண்டாம் இலக்க இயந்திரம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இயந்திரம் இதுவரை 17 முறை திருத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.