மியன்மார் நாட்டின் புதிய ஜனாதிபதியாக வின் மியின்ட் தேர்வு…

மியன்மார் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற வின் மியின்ட் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மியன்மார் நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் பல ஆண்டுகளாக நீடித்த இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜனாதிபதியாக ஹிதின் கியா பதவியேற்றார்.

ஹிதி கியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக அவர் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதற்கிடையில், ஹிதின் கியா தனது பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற வின் மியின்ட் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்ற வின் மியின்ட் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பை பாராளுமன்ற சபாநாயகர் மான் வின் கைங் தான் வெளியிட்டார்.