இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலி’யினுள் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளதாக இலங்கை விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படடுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுச் செல்கையில், குறித்த ஹெலிகொப்டருக்குள் இருந்த கர்ப்பிணிப் பெண்ணாருவர் குழந்தையை பிரசவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் , தாயும் குழந்தையும் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இரத்தினபுரி மருத்துவனையின் பணிப்பாளர் ரணவீர தெரிவிக்கையில்;
உலங்கு வானூர்தியில் பிரசவம் ஆரம்பமான போதும் , பிரசவம் மருத்துவமனையில் வைத்தே நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த குழந்தை 25 வாரத்திற்கும் குறைவான வயதுடைய குழந்தை என்பதால் , இது போன்ற குழந்தைகளை காப்பாற்றுவதில் மிகக்குறைவான சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.