இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரியா மீண்டும் இலங்கை அணியின் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக முன்னரே தெரிவித்திருந்தனர்.
அதன்படி முன்னாள் இலங்கை அணியின் தலைவரான சனத் ஜயசூரியாவை மீண்டும் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக நியமிக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக கபில விஜயவர்தன கடமையாற்றி வருகிறார்.
இவர் தலைமையிலான தெரிவுக் குழுவானது, எதிர்வரும் இந்திய கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்குகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியை தெரிவு செய்யும்.
இதன் பின்னர் நடைபெறும் அனைத்து தொடர்களுக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் பொறுப்பு புதிதாக நியமிக்கப்படும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவிடம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியை சனத் ஜயசூரியா தலைமையிலான தெரிவுக் குழுவே தெரிவு செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.