அரசாங்கத்தின் அழைப்பின் சகிதம் ஐக்கிய நாடுகளின் பலாத்காரமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான நடவடிக்கை குழு இலங்கைக்கு வரவுள்ளது.
எதிர்வரும் 9 முதல் 18ம் திகதி வரை இந்தக் குழு இலங்கையில் தங்கியிருக்கவுள்ளது.
குறித்த இந்தக் குழு இலங்கையில் காணாமல் போதலை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஆராயவுள்ளது. அத்துடன் உண்மையை கண்டறியும் செயற்பாடுகளையும் அக்குழு கேட்டறியவுள்ளது.
மேலும், கொழும்பில் இருந்து தமது பயணத்தை ஆரம்பிக்கும் இந்தக் குழு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து தகவல்களை திரட்டவுள்ளது.
இன்னும் குறித்த குழுவில், பேனாட் துஹாய்மி, டேவ்-உங் பேய்க் மற்றும் ஏரியல் டலிட்ஸ்கி ஆகிய அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குழுவினர் தமது விஜயத்தின் முடிவில் நவம்பர் 18ம் திகதியன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளனர்.