மீனவர்களின் கைது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – ஜெயலலிதா

தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படும் சம்பவங்களை இந்திய மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இராமேசுவரம், ஜகதாப்பட்டினத்திலிருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்ய தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதைத் தடுக்க மீனவர்களைக் கைது செய்தும், தாக்குதல்களை நடத்தியும் இலங்கை கடற்படை நடவடிக்கை மேற்கொள்கிறது.

இத்தகைய சம்பவங்களை இந்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இன்னும் மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை விடுவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டினை இலங்கை அரசு எடுத்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு, பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

இதேநேரத்தில், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்களையும் சேர்த்து, இலங்கையின் வசமுள்ள 37 மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிப்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல், படகு பழுதானதால் இலங்கைக் கடற்கரையில் ஒதுங்கியுள்ள 4 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.