தமிழக, ஆந்திர மீனவர்கள் இன்று(06) முதல் 3 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என இந்திய தேசிய இடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்தவாரம் தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளை தாக்கிய ஒகி புயல் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் வலுவிழந்து நள்ளிரவிலோ அல்லது இன்று(06) புதன்கிழமை காலையிலோ சூரத் அருகே கரையை கடக்கலாம் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
ஒகி புயல் குஜராத்தை தாக்கும் என்பதால் குஜராத், மராட்டிய மாநில மீனவர்கள் இன்று முதல் 8 ஆம் திகதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என இந்திய தேசிய அனர்த்த மேலாண்மை ஆணையம் மீனவர்களை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 50 முதல் 70 கி.மீ.வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(05) மாலை ஒகி புயல் சூரத் நகரில் இருந்து மேற்கே 390 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் புதிய புயல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இது வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் எனவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்து இருக்கிறது.
இது அடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அப்போது பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் 8 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.