இலங்கை – இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் 3 மாதங்களுக்கு ஒரு தடவை, இருதரப்பும் கூடி கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் இன்று(05) நடைபெற்ற இருநாட்டு இராஜதந்திர மட்டத்திலான பேச்சிவார்த்தையிலேயே மேற்கண்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில், இருநாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் அனுப்பி வைத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மீனவர் விவகாரம் தொடர்பில், பொறிமுறையொன்றை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வொன்று காண்பதற்கு, இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளையும் சேர்ந்த மீனவக் குழுக்கள், ஒவ்வொரு 3 மாதங்களும் கூடி ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, இருநாடுகளைச் சேர்ந்த மீன்பிடித்துறை அமைச்சுகளுக்கும் இடையில், இந்த விவகாரம் தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை கூட்டம் நடத்துவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அமைச்சுகள் மட்டத்திலான முதலாவது கூட்டம், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.