முதன் முறையாக வடகொரிய தலைவர் தென்கொரியா விஜயம்…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று(27) நடைபெறவுள்ளது.

கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது. இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பகை விலகத்தொடங்கியது.

அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவானது. இதை அமெரிக்காவும் ஆதரித்து வருகிறது.

இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் குறித்த உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் இன்று அங்கு செல்கிறார்.

கொரிய போர் முடிந்த பின்னர் (1953) வடகொரிய தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவினரும் அங்கு செல்கின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.