முதலமைச்சராக ஆசைப்படும் திரிஷா…

தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வரும் திரிஷா, அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசையிருப்பதாக கூறியிருக்கிறார்.

திரையுலகில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படம் வெளியானது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் “நடிகையர் திலகம்” தெலுங்கில் “மகாநதி” என்ற பெயர்களில் வெளியான படமும் வெற்றி பெற்றது.

கவர்ச்சி நடிகை ‌ஷகிலா வாழ்க்கையும் படமாகிறது. ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையும் படமாகிறது.

நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படமாக வந்தது. இப்போது கபில்தேவ் வாழ்க்கையையும் படமாக்குகின்றனர்.

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைந்தபோது தனியாக சென்று அவரது உடலுக்கு திரிஷா அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.

ஜெயலலிதா கையால் விருது வாங்கிய படத்தை தனது டுவிட்டர் முகப்பு படமாகவும் வைத்து இருக்கிறார். இதுகுறித்து திரிஷா கூறும்போது, ‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும். ஜெயலலிதா வாழ்க்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்’’ என்றார்.