இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-0 எனத் தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.
பெங்களூருவில் நடந்த 2-வது போட்டி மழையினால் ஆட்டம் சமநிலையில் நிறைவு பெற்றது. இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வந்த தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2 போட்டிகளிலும் ஸ்டெயின் இடம்பெறவில்லை. இருப்பினும் உடல் தகுதி பெற்று நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்ற வலைப்பயிற்சியில் ஸ்டெயின் பங்கேற்கவில்லை.
இதனிடையே, “டேல் ஸ்டெயின் நிச்சயம் குணமடைய மாட்டார் என்று சொல்ல முடியும். இந்த போட்டியில் அவர் விளையாடமாட்டார்.” என்றும் அந்த அணியின் கெப்டன் ஹசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் உள்ள ஸ்டெயின் இந்த தொடரில் முதல் போட்டியில் 11 ஓவர்கள் மட்டுமே வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.