வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரிந்த போது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில், முன்னாள் இராஜதந்திர அதிகாரிகள் ஐவர் குறித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தாய்லாந்து தூதுவராக பணி புரிந்த ஷாந்த கோட்டேகொட மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக பணிபுரிந்த முன்னாள் விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி ஆகியோரிடம் கடந்த 12ம் திகதி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பான் தூதுவராக பணிபுரிந்த முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக பணி புரிந்த முன்னாள் கடற்படை தளபதி திஸர சமரசிங்க ஆகியோரிடம் நேற்று வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஜப்பானுக்கான இலங்கை தூதுவராலயத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜெகத் குமார விஜேசிறியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.