முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக வலுப்பெறும் மற்றுமோர் குற்றச்சாட்டு.

யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தா பெற்றுக்கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக அது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும் என நேற்று(29) ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்த பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்மைகளை கண்டறியும் நீதிமன்றத்தை ஒத்த நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள கலப்பின நீதிமன்றம் போன்றதல்லாமல் இது முழுமையாக தேசிய நன்மைக்காக உள்நாட்டவர்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்னும், நிறுவவுள்ள நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் கடமையாற்றுவார்கள் என தான் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்த அமைச்சர் மங்கள தேவை ஏற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.