மும்பையில் பிரபல நடிகை ரகசிய திருமணம் – ரஷ்ய காதலரை மணந்தார்…

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் அவரது ரஷ்ய காதலருடன் மும்பையில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் ந.அழகப்பன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, ரவுத்திரம், ராஜபாட்டை, சந்திரா, தோழா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ரேயா ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.

மிகப்பெரும் கோடீஸ்வரரான இவர் சிறந்த டென்னீஸ் விளையாட்டு வீரர் ஆவார். உதய்ப்பூரில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. காதலை வெளிப்படையாகவே எல்லோரிடமும் தெரிவித்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மார்ச் மாதம் திருமணம் செய்வேன் என்று அறிவித்தார். ஆனால் திருமண திகதியை அறிவிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ஸ்ரேயா – ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12 ஆம் திகதி ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில் டென்னிஸ் வீரர் மனோஜ் பாஜ்பாய், நடிகை சபனா ஆஸ்மி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு முதல் நாள் அது தொடர்பான கொண்டாட்டங்கள் நடந்தன. மறுநாள் காலை இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்தார்.

ஸ்ரேயா ரகசிய திருமணம் பற்றிய தகவல் இன்று மும்பை சினிமா வட்டாரத்தில் பரவியது. இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அதை அவர் உறுதி செய்தார்.