முஸ்லிம்களுக்கென விமான நிறுவனத்தை நிறுவிய தமிழன்

மலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன், அவரது மனைவி கார்த்தியானி கோவிந்தன் ஆகியோர் இந்த விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

ரயானி ஏர் என்ற அந்த விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் இன்று கோலாலம்பூரில் இருந்து இன்று காலை 10 மணியளவில் 150 பயணிகளுடன் லங்காவி நகருக்கு முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த விமானத்தில் ஹலால் வகை உணவுதான் பரிமாறப்படும். மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரவி அழகேந்திரன் கூறுகையில், முஸ்லிம் பயணிகளை கவரும் வகையில்தான் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் விமானத்தில் அவர்கள் விரும்பும் வகையில் ஹிஜாப், ஹலால் உணவு, மது நீக்கம் போன்ற சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

பன்றிக்கறி பரிமாறப்பட மாட்டாது. விமானம் புறப்படுவதற்கு முன், இஸ்லாமிய முறையிலான பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படும்.

அதே வேளையில் விருப்பமுள்ள மற்ற பயணிகளும் இந்த விமானத்தில் பயணிக்கலாம்.

இதனை பாகுபாடான விஷயம் என்று எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. தற்போது 350 ஊழியர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தற்போது லங்காவி நகருக்கு மட்டும் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மலேசியாவின் மற்ற நகரங்களுக்கும் ரயானி ஏர் விமான சேவையை அளிக்கவுள்ளது.