பலருக்கு மூக்கைச் சுற்றி சொரசொரவென்று வெள்ளைப்புள்ளிகள் இருக்கும். வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தின் மென்மையைப் பாதிக்கும்.
நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் வெள்ளைப்புள்ளி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். வெள்ளைப்புள்ளிகளைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு:
தேவையான பொருட்கள்:
தக்காளி சாறு – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை: ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். பின்பு கிளின்சர் பயன்படுத்தி, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், வெள்ளைப்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.
க்ரீன் டீ மற்றும் கடலை மாவு:
தேவையான பொருட்கள்:
க்ரீன் டீ – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 1/2 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை: ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் க்ரீன் டீயை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
விட்டமின் ஈ மற்றும் டீ-ட்ரீ ஆயில்:
தேவையான பொருட்கள்:
விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1
டீ-ட்ரீ ஆயில் – 3-4 துளிகள்
பயன்படுத்தும் முறை: முதலில் ஒரு பௌலில் விட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த செயலை ஒருவர் மாதத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வெந்தயம் மற்றும் கற்றாழை:
தேவையான பொருட்கள்:
வெந்தயம் – ஒரு கையளவு
கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை: வெந்தயத்தை நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்கு அரைத்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.