‘மெர்ஸ்’ தொற்றும் கலங்கும் மத்திய கிழக்கும்

‘மெர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு சுவாச பாதிப்பு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் தென்கொரியாவில் எழுநூற்றுக்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதுவரை இந்த நோய் தாக்கி மூன்று பேர் அங்கே இறந்துள்ளனர். 35 பேருக்கு இந்த நோய் தாக்கியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோய் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது.

சவூதி அரேபியாவுக்கு வெளியே இந்த வைரஸ் இத்தனை பெரிய அளவில் பரவியிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

தென் கொரியாவின் அதிபர் பார்க் கியாங் ஹை இந்த நோய்க்கான வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த நோய்ப்பரவலைக்கண்டு தென்கொரியர்கள் பலரும் அதிர்ந்து போயிருப்பதாக அந்நாட்டில் இருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் வடகிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த ‘சார்ஸ்’ (SARS) என்கிற சுவாச நோயைப்போன்றதே இந்த ‘மெர்ஸ்’ நோய் என்பது குறிப்பிடத்தக்கது.