சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து மெஸ்ஸி ஓய்வு அறிவித்த சில மணி நேரத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடியும் சமூக வலைதளங்களில் ’டிரெண்ட்’ ஆகிவிட்டார்.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி தோற்ற விரக்தியில் நட்சத்திர ஆட்டக்காரரான மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார்.
அவரின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் சமூகவலைதளத்தில் சோகத்தில் மூழ்கினர்.
இந்த சமயத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான சாயித் அப்ரிடி நெட்டிசன்களுக்கு இரையாகி விட்டார்.
“மெஸ்ஸியே ஓய்வுஅறிவித்து விட்டார். நீங்க எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறீர்கள்” என்று கிண்டல் மீம்ஸ்களை போட்டு ’டிரெண்ட்’ செய்து விட்டார்கள்.
டி20 உலகக்கிண்ணத்தில் அப்டிரி தலைமையிலான பாகிஸ்தான் அணி மோசமாக ஆடி தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தது.
இந்த நிலையில் அப்ரிடியும் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் தான் ஓய்வு பெறவில்லை என்றும், தலைவர் பதவியை விட்டுவிட்டு ஒரு வீரராக அணியில் தொடர்ந்து ஆடுவேன் எனவும் தெரிவித்தார்.
36 வயதான அப்ரிடி 398 ஒருநாள் போட்டிகளில் 8,064 ஓட்டங்களும், 98 டி20 போட்டியில் 1,405 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
அதேசமயம் 29 வயதான மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக 112 போட்டிகளில் 55 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


