மைத்திரிக்கு வந்த தலையிடியும் ரணிலுக்கு வரவிருக்கும் ஆப்புகளும்

பதவிகளும், அதிகாரங்களும் கையில் தவழும்  போது வேலைப்பழுக்களை விட அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தான் அதிகம்.

அதன் பலாபலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுபவித்து வருபவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவின் வீழ்ச்சியும், மைத்திரியின் எழுச்சியும் யாரும் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்தது. அதன் ஒரு முடிவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை மைத்திரி ஏற்றுக்கொண்டமையாகும்.

ஆனால் இப்பொழுது அப்பதவியே மைத்திரிபால சிறிசேனவிற்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக நம்பகமான தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது.

இன்னும் ஒரு சில வாரத்தில் இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பினை வெளியிட வேண்டிய சூழ்நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்.

இந்நிலையில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுவேட்பாளராக யாரை நியமிக்கலாம்? சந்திரிக்காவா? மஹிந்தவா? அல்லது வேறு சிலரா என்பது தொடர்பாக குழம்பிப்போயுள்ள மைத்திரி சரியான முடிவெடுக்க முடியாமல் இருப்பதாகவும் குறித்த தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது.

இதுவொருபுறமிருக்க, மஹிந்த ராஜபக்ஷவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மைத்திரியின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நெருக்குதல்கள் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் இன்னொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் மாற்றுக்கட்சியில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் சந்திரிக்காவும் தேர்தலில் களமிறங்க கூடும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் சந்திரிக்காவா? மஹிந்தவா என்று ஒரு முடிவு எடுக்க முடியாத நிலையில் இருக்கும் அவர் புதிய அரசில் பிரதமராக இருக்கும் ரணிலை பற்றியும் கவலை கொண்டுள்ளதாகவும், ரணிலின் அடுத்த பிரதமர் கனவு சிதையப்போவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ஐக்கிய தேசியக் கட்சியினை வளர்த்தெடுக்க வேண்டும் என்று துடியாய்த்துடிக்கின்றார். நடக்கவிருக்கும் தேர்தலில் ரணில் பிரதமர் பதவியை பிடிக்கவில்லையாயின் அவரின் கட்சித் தலைமைப் பதவியும் கையை விட்டுப்போகும் நிலை உருவாகும் நிலையும் தோன்றியுள்ளது.

இந்நிலையில் தனது கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினையும் பாதுகாக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இப்பொழுது மைத்திரிபால பொறுப்புக் கூறவேண்டியவராக இருக்கின்றார்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக மஹிந்தவை வீழ்த்த பொறிமுறைகளை வகுத்த மேற்குலகு அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானித்து மைத்திரியிடம் தெரிவிக்கலாம் என்றும் சில தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

எதுவாயினும்; மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை பாதுகாத்து ஆட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார். அதே நேரம் மேற்குலகின் இசைக்கு ஏற்ப ஆடவேண்டியவராகவும் இருக்கின்றார்.

இவற்றிற்கு எல்லாம் முடிவை எடுப்பதில் அவருக்கு தற்பொழுது இருக்கும் சவால்கள் மிகப்பெரியது தான். ஆனால் இவற்றை மேற்குலகம் சரியாக கையாளும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆனால் இப்பொழுது மைத்திரியின் தலையிடியை விட ரணில் தனது கனவிற்கு ஆப்பு வந்துவிடுமோ என்று கலங்கிப்போயிருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஶ்ரீகொத்தாவின் தகவல்களும் கசிந்துள்ளன.

இனி என்ன நடக்கும், நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்கின்ற செய்திகள் வேறு இப்பொழுது அடிபடுகின்றன. மேற்குலகின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் செல்லுமா இலங்கை என்பது சந்தேகமே..