பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சராக இன்று(15) நியமிக்கப்பட்ட ஸ்ரீயானி விஜேவிக்ரம அங்கத்துவராக இருக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறித்த இந்த அறிவிப்பை இன்று(15) விடுத்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியின் முக்கிய செயற்பாட்டு உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அண்மையில் இணைந்து கொண்டார்.
இதுகுறித்து குறித்த கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம அரசாங்கத்திற்கு இணைந்து கொண்ட தீர்மானத்தை பொதுஜன ஐக்கிய முன்னணி நிராகரிக்கின்றது. எமது கட்சியின் செயற்குழு கூடி இது குறித்து கலந்துரையாடியதோடு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது. எமது கட்சியின் தீர்மானத்தை எழுத்து மூலம் ஊடகங்களுக்கும் வழங்கியிருக்கின்றோம்.
அரசியலில் எதிர்வரும் 9ஆம் திகதி கட்சியின் தீர்மானத்தின்படி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த அவர், அதற்கடுத்த தினம் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அரசாங்கம் மேற்கொண்ட மற்றுமொரு சூழ்ச்சிதான் இது. இன்னும் பல சவால்களும், அநீதிகளும் ஏற்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்த எமது கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கம் தனக்கருகே இணைத்துக் கொள்ளும் முயற்சியானது மக்களின் எதிர்ப்புக்கே உள்ளாக்கப்படும்” என்றார்.
#reeshmaa..