ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு விடயம் குறித்து உரிய தீர்மானம் எடுத்து அதை அனைவருக்கும் தெரிவிக்கும் முன்பதாகவே மஹிந்த ராஜபக்ஸவுக்கு அந்த தகவல் சென்றுவிடுவதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.
ஜனாதிபதியின் செயற்பாடுகள், அவர் எடுக்கும் முடிவுகளைப் பற்றி கண்காணிப்பதற்காக மஹிந்தவின் உளவாளி ஒருவர் மைத்திரியுடன் இருப்பதாகவும், இதனாலேயே மைத்திரி எடுக்கும் அனைத்து முக்கியமான முடிவுகளையும் மஹிந்த அறிந்து கொள்கின்றார் என்றும் கூறினார்.
இதற்கு ஒரு உதாரணத்தையும் அமைச்சர் கூறினார். அதாவது, டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் மஹிந்தவுடன் தொடர்புபட்ட முக்கியஸ்தர்களின் பணவைப்பு தொடர்பாக அரசாங்கம் அறிந்து கொண்டு, அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த பின்னர் ஒரு தீர்மானம் எடுப்பதற்கு தயாராக இருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்தவிடமிருந்து மைத்திரிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்ததாகவும், அதில் டுபாய் வங்கியிலுள்ள பணவைப்பு தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்ட விடயம் தொடர்பாக மஹிந்த வினவியுள்ளார்.
ஊடகங்களுக்கோ, மற்றைய அமைச்சர்களுக்கோ இது தொடர்பாக அறிந்திருக்காத சந்தர்ப்பத்தில் மஹிந்த மட்டும் அதை எவ்வாறு அறிந்து கொண்டார்.
மேலும், ஒப்பந்தத்திலோ அல்லது ஒரு அறிக்கையிலோ கையொப்பமிடுவதற்கு முன்னர் மஹிந்த இது தொடர்பாக அறிந்து விடுவார் என்றும் ராஜித குறிப்பிட்டார்.
மஹிந்தவின் ஆதரவாளர்கள் தற்போதைய அரசாங்கத்திலும், அரச திணைக்களகங்களிலும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சுயாதீனமாக இருப்பதைப் போல் காட்டிக்கொள்வதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த போன்றோரை விசாரணை செய்வதில்லை எனவும், தம்பக்கம் நியாயம் இருப்பதைக் காட்டிக்கொள்வதற்காக கடந்த காலங்களில் சிறு சிறு தவறுகளை செய்த சிலரையே விசாரணைகளுக்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏ.எச்.எம்.பௌசியிடம் விசாரணைகள் மேற்கொண்டதும் இதன் ஒரு செய்பாடுதான் எனவும் அறிவித்தார். மூத்த அரசியல்வாதியான ஏ.எச்.எம்.பௌசியிடம் FCID இல் பயிற்சி பெறுபவர்களே விசாரணைகளை மேற்கொண்டதாகவும், இது தவறு என்றும் கூறினார்.
இதிலிருந்து நல்லாட்சிக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு கடந்த ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் முயற்சிப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், மூன்று முன்னாள் படைத்தளபதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் தவறான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அரச ஊடகங்கள் கூட அதனை தவறாக வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை துபாய் வங்கிக் கணக்கில் இருந்து தலா 500 மில்லியன் டொலர்கள் இரண்டு முறை எடுக்கப்பட்டு விட்டதாகவும் அதில் பணம் இல்லை என்பதால், விசாரணை வெற்றியளிக்கவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் காணி மற்றும் வீடு குறித்து கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன, அந்த காணியும் வீடு தனது என்று பசில் எப்போதாவது கூறுவாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதியாக சுற்றி வந்து பசில் ராஜபக்சவே அந்த காணிகளை கொள்வனவு செய்ய வாய்ப்புள்ளது. அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு இதனை விட பல விடயங்கள் உள்ளன எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.