முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்காக பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய விடயத்தை தாம் நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் எனவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக இலங்கை மாதா அமைப்பின் தலைவியான மதுஷா ராமசிங்க கொழும்பு – இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று(20) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தேர்தல்கள் ஆணையாளரே, வேட்புமனுவைப் பெறுவதற்கு பாலியல் இலஞ்சம் வழங்க வேண்டுமா? என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதையை ஏந்தியவாறு கறுப்பு ஆடையில் வந்த அவர் தனது அமைதிப் போராட்டத்தை நடத்தியிரு்தார்.
மேலும் மேற்குறித்த இந்த விடயம் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றையும் அவர் நேற்று வழங்கியிருந்தார்.
இது குறித்து நாமல் தெரிவிக்கையில்; “அப்படியொரு பாலியல் இலஞ்சம் கோரினார்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் நிராகரிக்கின்றேன். மொட்டுக் கட்சியில் வேட்னுமனு கோருவதற்கு பலர் இருக்கின்றனர். எவ்வாறாயினும் அந்தப் பெண்ணுக்கு அப்படியொரு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் தேர்தல் ஆணையாளரிடம் சொல்லாமல் பொலிஸாரிடத்தில் கூறும்படி நான் ஆலோசனை கூறுகின்றேன்” என்றார்.