மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தின் 6 வீதம் கல்விக்கு – நிதி அமைச்சர்

மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தின் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்க்கட்சியாக இருந்தபோது மேற்கொண்ட வேண்டுகோளை அரசு அதன் முதலாவது வரவு – செலவுத்திட்டத்திலேயே நிறைவேற்றத் தயாராக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கொழும்பு, பாலத்துறை, ஸ்ரீ சங்கபோதி வித்தியாலயத்தில் நேற்று(6) நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“கல்வி என்பது வெறுமனே புத்தகப் படிப்பு மாத்திரமல்ல. விளையாட்டு, கலைத்துறைகளில் மாணவர்களுக்குள்ள இயல்பான திறமைகளை வளர்ப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். எனவே, நாம் எல்லோரும் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

எமது அப்பாவி ஏழைச் சிறார்களின் எதிர்காலத்தை மெருகூட்டுவதற்காக என்று சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர இலவச கல்வியை அறிமுகம் செய்தார். எனினும், அன்று முதல் இற்றை வரை அந்த இலவசக் கல்வியின் பெறுமதி அன்றாடம் குறைந்து செல்ல ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக பாடசாலை மூலம் உருவாகும் மாணவன் நாட்டுக்கு உகந்த பிரஜையாக வளரச்செய்ய புதிய அரசாங்கம் செயற்படும். அதன்கீழ் கல்விக்கான ஒதுக்கீடுகளை அதிகரித்து எதிர்வரும் வரவு -செலவுத்திட்டத்தில் பாரிய மாற்றமொன்றை மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும், எமது அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன் கூறியதுபோலவே மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் இம்முறை கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

ஆரம்பக் கல்வி, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்வி ஆகியவற்றில் கடந்த காலங்களில் குறைக்கப்பட்ட நிதி மீள வழங்கப்படவுள்ளது.  கல்வியைப் பொறுத்தவரையில் இலங்கையை ஆசியாவில் சிறந்த நாடாக மாற்றுவதே எமது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.