‘மொபைல் கேம் செலன்ஜ்’ போட்டியை அறிமுகம் செய்த முதலாவது உள்ளுர் வங்கி

நடமாடும் கருவிகள் மூலமான விளையாட்டுக்களை கண்டுபிடிப்பவர்களை ஆதரவளிக்கும் வகையில் கொமர்ஷல் வங்கி ஒரு போட்டியை நடத்தி முடித்துள்ளது. இந்த விளையாட்டுக்களை விருத்தி செய்பவர்களின் படைப்பாக்கத் திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் வங்கியொன்றால் அறிமுகம் செய்யப்பட்ட இவ்வகை சார்ந்த முதலாவது போட்டி இதுவாகும். ´கொமர்ஷல்வங்கி மொபைல் விளையாட்டு அபிவிருத்தி சவால்´ எனும் பெயரில் இந்தப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மூன்று மாதத்துக்கு மேற்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக் வழியாக இந்தப் போட்டிக்கு 100க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்தன. தனிநபர்கள், கம்பனிகள், தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் பலவற்றின் பட்டதாரி மாணவர்கள் இதில் அடங்கும். இதன் முடிவில் 13 விளையாட்டுக்கள் இறுதிச் சுற்றுக்காகத் தெரவாகின.

பரிசோதனைக் காலப்பகுதியில் அதிகளவு தரவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் ´லைட் அப் த கிரிட்´,´டெவில் ரண்´, மற்றும் ´பிளப்பி´ என்பன முறையே முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளன. கூகுள் பிளே ஸ்டோரில் இவற்றை தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். இவற்றுக்கு சிறந்த விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன.

´உள்ளுரின் நடமாடும் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை கொமர்ஷல் வங்கி உணர்ந்துள்ளது. இது பெரும்பாலும் பட்டதாரி மாணவர்களும் ஏனைய மாணவர்களும் பங்கேற்கும் ஒரு துறையாக உள்ளது. நடமாடும் கருவிகளுக்கான மென்பொருள் அபிவிருத்தியாளர்களை ஊக்குவித்து அங்கீகரிப்பதே இதன் பிரதான குறிக்கோளாகும். அவர்கள் இத்தகைய பிரயோகங்களைக் கண்டு பிடித்து வங்கியின் ஆதரவோடு அறிமுகம் செய்யும் ஒரு வாய்ப்பை வழங்குவதும் இதன் நோக்கமாகும்´ என்று கூறினார் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவு பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க.

விளையாட்டுக்களை கண்டுபிடித்து அவற்றை இணைய மேடையில் அரங்கேற்றி ஏதாவது ஒரு சந்தைப்படுத்தல் பொறிமுறையைப் பயன்படுத்தி பிரபலம் அடையச் செய்வது ஆகிய விடயங்களை உள்ளடக்கியதே இந்தப் போட்டியாகும்.

சமர்ப்பிக்கப்பட்ட விளையாட்டுக்கள் துறைசார் நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டுள்ளன. எண்ணக்கருவின் அசல் தன்மை, தரவிறக்கம் செய்யப்படும் எண்ணிக்கை, தொழில்நுட்ப பாவனை, கற்புல வடிவமைப்பு, கட்டுப்பாடுகள், உள்சேர்க்கைகள், பொழுதுபோக்கு பெறுமானம் என்பன மதிப்பீடுகளின் போது கவனத்தில் கொள்ளப்பட்ட அமசங்களாகும். வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்த சவாலை முன்னெடுத்தவர்கள் என்ற வகையில் கொமர்ஷல் வங்கி இதன் அபிவிருத்தியாளர்கள் சார்பாக இவற்றை சந்தைப்படுத்தும். அத்தோடு உள்ளுரில் இவற்றைப் பிரபலப்படுத்தும் அதேவேளை சர்வதேச சந்தைக்கு இவற்றை அறிமுகம் செய்வதற்கான அடித்தளத்தையும் வங்கி பெற்றுக் கொடுக்கும். வங்கித் துறையில் தொழில்நுட்ப ரீதியான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்னணி வகிக்கும் கொமர்ஷல் வங்கி அண்மையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலத்திரனியல் கணக்குப் புத்தகத்தை அறிமுகம் செய்து புதிய சாதனைப் படைத்துள்ளது. சேமிப்பு கணக்கு, நடைமுறை கணக்கு, வதியாதோர் வெளிநாட்டு நாணய கணக்கு, வதிவிட வெளிநாட்டு நாணய கணக்கு என்பனவற்றின் விவரங்களை அனட்ரோயிட் மற்றும் iOS வலு மூலம் செயற்படும் கையடக்க கருவிகள் மூலம் தெரிந்து கொள்ள இது வழியமைத்துள்ளது. மேலும் அப்பிள் அல்லது அன்ட்ரோயிட் வலு கொண்ட கருவிகள் மூலம் வங்கி அறிமுகம் செய்துள்ள அதன் சொந்த அதிநவீன பிரயோகம் மூலம் இன்னும் பல்வேறு விதமான வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் நடமாடும் கருவிகள் மூலமான விளையாட்டு அபிவிருத்தி துறையானது துரித வளர்ச்சி கண்டு வரும் ஒரு துறையாகும். இந்தத் துறை பல தொழில்முயற்சியாளர்களை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகப் புதிய கண்டு பிடிப்புக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை வழங்க அர்ப்பணம் பூண்டுள்ள கொமர்ஷல் வங்கி அதற்கு மேலதிகமாக உள்ளுர் நடமாடும் விளையாட்டுத் துறை அபிவிருத்தியளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் தனது சந்தைப்படுத்தல் நிபுணத்துவம் மூலமும் தொடந்து தேவையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது என வங்கி அறிவித்துள்ளது.

ஐந்து வருடங்களாக தொடர்ந்து உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 250 கிளை வலையமைப்புடனும் 625 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. நாட்டில் தனியொரு வங்கி கொண்டுள்ள மிக விசாலமான இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை இதுவாகும். 2014ம் ஆண்டில் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் அது தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி ஏனைய பல சர்வதேச சஞ்சிகைகள் மூலமாகவும் கடந்த பல ஆண்டுகளில் இலங்கையின் தலைசிறந்த வங்கி என தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு; 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில்; இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.