மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று(30) திறக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன், மொரகஹகந்த நீர்த்தேக்க திட்ட வளாகத்தையும் பார்வையிடவுள்ளார்.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இறுதி நீர்ப்பாசன திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் 2015 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், கொங்றீட் அணைக்கட்டு, களிமண் அணைக்கட்டு மற்றும் கருங்கல் நிரப்பப்பட்ட அணைக்கட்டு போன்ற மூன்று அணைகளைக் கொண்ட ஒரே ஒரு நீர்த்தேக்கம் இதுவாகும்.
இந்த திட்டத்தின் கீழ் வடமத்திய வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சுமார் 2,000 சிறிய மற்றும் பெரிய குளங்களுக்கு நீர் வழங்கப்படவுள்ளதுடன், வடமத்திய மாகாணத்தில் 1,600 குளங்களுக்கும் வடமேல் மாகாணத்தின் 303 குளங்களுக்கும் நீர் வழங்கப்படவுள்ளது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன், நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் வருடாந்தம் 336 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருளை சேமிக்க முடியும்.
கடந்த ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியினால் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதுடன் மிகக் குறுகியதொரு காலப் பகுதியில் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது அதிகரித்து நீரால் நிரம்பியுள்ளமையினால் அதன் வான் கதவுகள் திறந்து வைக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.