இந்திய பிரதமர் மோடியை கைது செய்யும் நபர்களுக்கு ரூ. 100 கோடி பரிசாக அளிக்க போவதாக ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான் கட்சியின் தலைவர் சிராஜ் அல் ஹக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடின கொள்கை கொண்ட ஜமாத் இ- இஸ்லாமி கட்சி தலைவர் அல் ஹக் , பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான ராவல்கோட்டில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசினார். அவரது பேச்சில், மோடியையும், இந்திய அரசையும் கடுமையாக சாடியதுடன், பாகிஸ்தான் அரசியல் அமைப்பினரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆதரவாளர்கள் மத்தியில் அல் ஹக் பேசியதாவது: இந்திய பிரதமர் மோடிக்கும், அவரது ஏஜன்டுகளுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் எங்களின் ஜிகாதிகளை உங்களால் பிடிக்க முடியாது. ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான சையீது சலாவுதீனை கைது செய்ய மோடி அரசு ரூ. 50 கோடி வெகுமதி அறிவித்துள்ளது.
நான் சொல்கிறேன். இது நடக்காது. மோடியை கைது செய்து வரும் நபர்களுக்கு நான் அறிவிக்கிறேன் 100 கோடியை எங்கள் இயக்கம் வழங்கும்.
காஷ்மீர் விவகாரம் நீண்ட காலமாக இருந்து வரும் விவகாரம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவவோ, இந்தியாவுடன் நட்புறவு கொள்ளவோ பாகிஸ்தான் அரசியல்வாதிகள் விரும்பினால் இவர்கள் கண்டனத்திற்குள்ளாவார்கள். இவர்கள் நாட்டின் தேச துரோகியாக கருதப்படுவர். இந்தியாவை விரும்பும் நபர்களுக்கு பாகிஸ்தானில் இடமில்லை.