யாசகர்கள் மற்றும் மாடுகளுக்கு கொழும்பில் தடை – அமைச்சர் சம்பிக்க

யாசகர்கள் மற்றும் மாடுகளுக்கு கொழும்பில் நடமாட தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பு மாநகர சுகாதார பரிசோதகர்களுடன் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். பத்தரமுல்லையில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இந்தக் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க;

பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் காரணமாக இந்நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகள் சிக்கலான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் கண்டபடி சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் யாசகர்கள் காரணமாக கொழும்பு மாநகரின் அழகு கெட்டுப் போகின்றது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆரம்ப கட்டமாக கொழும்பில் உள்ள யாசகர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கொழும்பில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளும் அகற்றப்படும்.

எதிர்காலத்தில் கொழும்பு மாநகருக்குள் மாடுகளை எடுத்து வருவது தடை செய்யப்படும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.