யாழ்.நூலகத்திற்கு அத்து மீறிய ஆர்யா.. – யாழ். மாநகர சபை கண்டனம்..

யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய நடிகர் ஆர்யா, யாழ். பொது நூலகத்தில் அத்துமீறிய நுழைந்ததாகவும், இதன் காரணமாக நூலகத்தின் வாசகர்கள் உள்ளிட்ட பலரும் குழப்பம் அடைந்துள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நூலகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அதன் வெளிப்புறத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை அத்துமீறி நூலகக் கட்டடத்தின் உள்ளே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் க.ஜெயசீலன் தெரிவித்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் அத்துமீறி நடந்து கொண்டனர் என ஆணையாளர் தெரிவித்தபோதும், அங்கு பணியாற்றுவோர் படப்பிடிப்புக் குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது வாசகர்கள் உள்ளே நுழைவதையும் சுற்றுலாத் துறையினர் நூலகத்தைப் பார்வையிடுவதையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் அரை மணி நேரம் இந்தக் குழப்பம் நீடித்தது. மேலும், நடிகர் ஆர்யாவின் படப்பிடிப்பு பொது நூலகத்தில் நடைபெறுகிறது என கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சிலர் நூலகத்திற்கு வந்து அவருடன் ‘செல்பி’ எடுத்தும் கொண்டுள்ளனர்.

நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பே இவ்வாறு யாழில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.