யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில், பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்துமாறு, உரிய அதிகாரிகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்களின் மரணங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 காவற்துறை அலுவலர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய அவர்களை 14 நாட்கள் அநுராதப்பபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் எஸ் சதீஸ்கரன் இன்று(22) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு உந்துளிருயில் பயணித்து கொண்டிருந்த 2 மாணவர்கள், உந்துருளி மதிலொன்றில் மோதியபோது, பலியானதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் சம்பவத்தின் போது துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் போது உந்துளிருயை செலுத்திய மாணவரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படும் 5 காவற்துறை அதிகாரிகளே கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.