யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கை மீளப் பெறவுள்ளதாக, தமிழ், சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதிக்கு முன்னர் இரு தரப்பினரையும் முறைப்பாடுகளை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 16ம் திகதி யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது, சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை ஏற்பாடு செய்தமையினால் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
இதன்போது காயமடைந்த சிங்கள மாணவன் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமிழ், சிங்கள மாணவர்களால் எதிர் எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து, இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், நேற்று (02) குறித்த வழக்குகளை வாபஸ் பெறவுள்ளதாக தமிழ், சிங்கள மாணவர்கள் நீதிமன்றத்தில் அறிவித்ததாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.