யாழ் மாணவர்கள் கொலை – 5 பொலிஸாருக்கும் விளக்கமறியல் நீடிப்பு..

சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் வழக்கு விசாரணை இன்று(02) வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் நடராஜா கஜனின் தாயரிடம், முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரி அது ஒரு விபத்து என்றும் திட்டமிட்டு இந்த சம்பவம் நடைபெறவில்லை எனவும் பெறப்பட்ட வாக்குமூலம் வழக்கினை திசை திருப்புவதாக சட்டத்தரணி சுமந்திரன், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து இது பற்றி விசாரணை செய்யுமாறு யாழ். நீதவான் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இது குறித்து யாழ். பொலிஸ் நிலையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பதிகாரியிடம் வாக்குமூலம் பெறுமாறும் நீதவான் பணித்ததுடன், சம்பவம் நடைபெற்ற பின்னர் மன்றில் சமர்ப்பிக்கப்படும் “பி” அறிக்கையில் விபத்து என பொலிஸார் குறிப்பிட்டுள்ளமையினால் அந்த விடயத்தினையும் விசாரணை செய்யுமாறும் பணித்தார்.

மேலும் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 16ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.